Ad Widget

வட. மாகாண சபையின் அறிவிப்பு வேதனையளிக்கிறது: யாழ். பல்கலை சமூகம்

முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்றி. மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள்தான் மே-18.

இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. எனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை.

இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடத்த உரித்துண்டு என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.

வடக்கு மாகாணசபை இந்நிகழ்வை நடத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேலும், வடக்கு மாகாணசபையானது தேர்தல் வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார் கையிலாவது போய்ச்சேரும். இன்றிருக்கும் முதல்வர் இனவழிப்பு தொடர்பிலும் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் சரியான நோக்குடன் செயற்படுகிறார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஆனால் தொடர்ந்து வரப்போகும் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதிபடச் சொல்லமுடியாது. இன அழிப்புக்குத் துணைபோனவர்கள்கூட மாகாணசபை நிர்வாகத்தைக் கையில் எடுக்கக் கூடும்.

இந்நிலையில் மே-18 நிகழ்வை வடக்கு மாகாணசபையே முள்ளிவாய்க்காலில் நடத்தும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வு கேலிக்குரியதாகிவிடும்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, தாங்கள் முதல்வராக இருக்கும்போதே இந்நிகழ்வை ஒரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வழிசமையுங்கள் என்று நாம் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எனினும் வடக்கு மாகாணசபையின் தன்னிச்சையான போக்கும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடிப்படையில் சிலர் சிந்தித்ததன் விளைவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழவிருந்த ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் சமூகம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பல்வேறு வழிகளில் தமது ஆதரவை வழங்கியிருந்த நிலையில் வடக்கு மாகாணசபையின் தான்தோன்றித்தனமான இந்த முடிவு எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts