Ad Widget

வட மாகாண உள்ளக வீதிகளைப் புனரமைக்க உடனடி ஏற்பாடுகள் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தின் உள்ளக வீதிகள் திருத்தப்படாமை காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இவ் வீதிகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்வதற்கு உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கு மாகாணத்தில் 2120 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் இதுவரையில் புனரமைப்புச் செய்யப்படாதுள்ளன. இவற்றில், 1800 கிலோ மீற்றர் உள்ளக வீதிகள் உடனடியாகப் புனரமைப்புச் செய்யவேண்டிய நிலையில் காணப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த ஆட்சிக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள வீதிகள் அனைத்தும் புனரமைப்புச் செய்யபட்டு, நவீன தரத்தில் அமைய நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். எனினும், யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உள்ளக வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு உரிய தரப்பினர் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமை காரணமாக பெரும்பாலான மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு மாகாண சபை இவ் விடயம் குறித்தும் அவதானமெடுப்பதாக இல்லை. வருட இறுதிகள் தோறும் மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை எதுவித அபிவிருத்திப் பணிகளுக்கும் செலவிடாமல், பத்திரப்படுத்தி மீள திறைசேரிக்கு அனுப்புவதைவிடுத்து, இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண சபை முன்வர வேண்டும். அந்த வகையில் இவ் வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கு உடனடி ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts