Ad Widget

வட மாகாண அரச காணிகளை வட பகுதி மக்களுக்கே பகிந்தளிக்க உத்தரவு!

வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலாகத்தில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தில் காணி பிரச்சினைகள் தொடர்பில் பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பளை பிரதேசத்தில் காணி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை வெளிமாகாணத்தவர்களுக்கு வழங்கியமை தொடர்பில் பலதரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அத்துடன் வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் இராணுவத்தினரது பாவனையில் உள்ள காணிகள், அரச காணிகளை காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் ஒரு இலட்சம் முயற்சியாளர்களுக்கான காணி பகிர்ந்தளிப்பு போன்றவற்றிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கே அப்பிரதேசங்களிலுள்ள காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துறைசார் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பு அதிகாரி எஸ் நிமலன் பளையில் காணப்படுகின்ற காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வடக்கு மாகாணம் அல்லாதவர்களுக்கு வழங்கியது உண்மை என அமைச்சர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டதுடன் அவ்வாறான மேலும் பல விண்ணப்பங்களும் தமக்கு தெரிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து குறித்த அதிகாரியிடம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்ல பட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக குறித்த அதிகாரி நிமலன் தெரிவித்ததை அடுத்து துறைசார் தரப்பினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே குறித்த கோப்புக்களை நாளைய தினத்தக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பணித்திருந்தார்.

அத்துடன் வட மாகாண மக்களுக்கு உரித்தான காணிகளை அந்த மாகாண மக்களுக்கு வழங்குவதோடு வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் துறைசார் தரப்பினர் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துறைசார் அதிகாரிகளிட்டட் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வனஜீவராசிகள், வன திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்ச்சகை்குரிய இடங்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்றை உயர் அதிகாரிகளை அழைத்து மேற்கொள்ளுமாறு கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts