Ad Widget

வட மாகாணத்தில் எல்லைகள் சுருங்கும் அபாயம்

வட மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமிழ் மக்களை மாகாணத்தின் எல்லைகளை நோக்கி நகர்த்த வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் எல்லைகளால் வட மாகாணத்தின் எல்லைகள் சுருங்கும் அபாயம் ஏற்படும் என வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பித்தலுக்கான விசேட அமர்வு வட மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாகாணத்தின் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட குடியேற்றங்களினால் தமிழ் மக்களை நோக்கி எல்லைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பாதீட்டில் அதிகளவு நிதியை ஒதுக்குங்கள். இல்லையென்றால் இதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பாரதூரமானதாக இருக்கும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னான கடந்த 6 வருடங்களில் 12 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இந்த விடயத்தை நாங்கள் சாதாரண விடயமாக கருத்தில் கொள்ள முடியாது என்றார்.

மேலும், நாம் அபிவிருத்திகளை நகரங்களுக்குள் அல்லது வளர்ச்சியடைந்த பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படுவதை தவிர்த்து எமது மாகாணத்தின் எல்லைகளில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து எல்லைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts