Ad Widget

வட. மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலை கிளிநொச்சியில்!

வடக்கு மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கும் நோக்கில் நிதி வழங்குனர்களுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 4.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.

நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள விசேட வைத்தியசாலைகளில் வடமாகாணத்திற்கான புனர்வாழ்வு வைத்தியசாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலும், பெண்நோயியல் வைத்தியசாலையை கிளிநொச்சியிலும் அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பெண் நோயியல் வைத்தியசாலைக்கான அமைவிடம் மற்றும் அது பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய முறையில் வழங்கப்படாது, கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் இரண்டாம் கட்டப்பணிகளுக்குள் இது உள்வாங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி பல்வேறு தரப்புக்களிடமும் எழுந்த நிலையில் இதன் கட்டுமானப்பணிகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் கடந்த வாரமும் கூட்டம் நடைபெற்றது.

அது பற்றிய மற்றொரு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறித்த வைத்தியசாலையை கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தமான இடத்தில் அமைப்பது என்றும், இதில் ஏற்படுத்தப்பட வேண்டிய சில மாற்றங்கள் தொடர்பில் நிதி வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி குறித்த வைத்தியசாலை கிளிநொச்சியில் அமைப்பது என்றும் திடமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related Posts