Ad Widget

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஒருவனின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் வீதியில் திங்கட்கிழமை (25) நின்றிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் சென்று 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் காரைநகர் பரமநாதன் அபிராம் (வயது 22) என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞனைத் தாக்கியவர்களில் ஒருவரை பொன்னாலை சோதனைச் சாவடியில் நின்றிருந்த கடற்படையினர் கைது செய்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். எனினும் ஏனைய நபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் முறைப்பாடு செய்யச் சென்றபோதும், இந்த முறைப்பாட்டை ஏற்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மனித உரிமை ஆணைக்குழுவில் உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்தனர். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இளைஞனை தாக்கிய 3 நபர்களையும் கைது செய்த பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.

Related Posts