Ad Widget

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்!!

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள்,

விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது.’ எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார்.

மேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழி முறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் எனவும் கூறினார்.

அத்துடன் விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்த அறிவுப்பரிமாற்றத்தின் மாற்றம் அடுத்த வருட விவசாய உற்பத்திகளின் தரவுகளிலே தனித்துத்தெரியவேண்டும் எனவும் ‘ பழையன கழிதலும் புதிய புகுதலும் எனும் வசனத்திற்கு ஏற்ப புதிய விவசாய உற்பத்தி மற்றும் பயிற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்தி விவசாயத்திலும் விவசாயிகளின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Posts