Ad Widget

வடமாகாண விவசாய நிலங்கள் நஞ்சாகி விட்டமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும் : முதலமைச்சர்

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக விவசாய முயற்சிகளில் எமது விவசாயிகள் ஈடுபட்டுவந்துள்ள போதும் விவசாய நிலங்கள் அண்மைக் காலங்களில் மட்டும் இவ்வாறு நஞ்சடைந்தமைக்கும் மழை காலத்திற்கு வராமைக்கும், நீர்பற்றாக் குறைக்கும் காரணங்கள் கண்டறிதல் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் விவசாயத்துறை நவீன மயமாக்கல் செயற்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை நஞ்சாக்கி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புற்றரைகள் பலதும் கற்றரைகளாக மாற்றப்பட்டமை, பனந்தோப்புக்கள், மரச்சோலைகள் அகற்றப்பட்டு அங்கே மாடிவீடுகள் அமைக்கப்பட்டமை, வீட்டைச் சுற்றியும், தோட்ட வயல் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களைச் சுற்றியும் வரம்புகள் அமைத்து மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரின் அளவை பேணுகின்ற நடைமுறையைக் கைவிட்டமை, சிறு சிறு குளங்களை தூர்வை வாரி நீரை சேமித்து வைக்க முயற்சி செய்யாமை, சேதனப் பசளைகள் பாவனைக்குப் பதிலாக ,ரசாயன உரக்கலவைகளின் பாவனை மற்றும் மாற்றுப் பயிரீட்டு முறைமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதால் அதிகரிக்கப்பட்ட நோய்த்தாக்கங்கள், பூச்சித் தாக்கங்கள் அதன் காரணமான கிருமிநாசினிப் பாவனைகள் போன்ற பல தவறான நடவடிக்கைகள் நிலத்தடி நீர் அசுத்தமாவதற்கும் நீர்ப்பற்றாக் குறைக்கும் காரணங்களாக அமைந்து விட்டன. மலக் கழிவுகள் நீருடன் கலப்பதும் ஒரு பாரிய பிரச்சனையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் வாழ்வது இந்தப் பூமியில் அதனோடு இயைந்து வாழப்பழகிக் கொள்ளாவிட்டால் அதன் எதிர்மறையான தாக்கத்திற்கு நாங்கள் இடங்கொடுக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே போன்று சந்தை வாய்ப்புகளுக்கான மத்திய நிலையம் ஒன்று வட மாகாணத்தில் அமைக்கப்படும் பட்சத்தில் இங்குள்ள விவசாய உற்பத்திப் பொருட்கள் அம் மத்திய நிலையத்தில் விற்பனை செய்வதற்கும் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகள் இங்கே வந்து பொருட்களை கொள்வனவு செய்யவும் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
மேலும் விவசாயத்தை நவீன மயப்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது எனவும் முக்கியமாக வெளிநாட்டுச் சந்தைக்கேற்றவாறு விவசாயத்தை மாற்றி அமைத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts