Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சு நடாத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சு மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது.

rekla1

இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

பூமிப்பந்தெங்கும் பரந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவராலும் சமய வேறுபாடுகள் கடந்து கொண்டாடப்படும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருவிழாவாகத் தைப்பொங்கல் விழா தொன்றுதொட்டு இடம்பெற்று வருகிறது. உழவுத் தொழிலில் நல்ல விளைச்சலைக் கொடுத்தமைக்காக இயற்கைக்கும், உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்பட்டுவரும் இத் தைத்திருநாளையொட்டித் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் இடம்பெறுவது வழக்கம். எனினும் போர்க்காலத்தில், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இப் பாரம்பரிய விளையாட்டுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அந்தவகையில், வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள இம் மாட்டுவண்டிச்சவாரிப்போட்டி மூளாய் பொன்னாலைச் சவாரித்திடலில் தைப்பொங்கல் நாளான 14.01.2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. காளைகளை எவ்விதத்திலும் துன்புறுத்தலாகாது என்ற நிபந்தனையுடன் நடாத்தப்படவுள்ள இப்போட்டிக்கான விண்ணப்ப முடிவு இம்மாதம் 10ஆம் திகதி ஆகும்.

விண்ணப்பப் படிவங்களை 295, கண்டி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்வதோடு, போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 0778449739 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இம்மாபெரும் மாட்டுவண்டிச் சவாரியில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கான பரிசுகள் 18.01.2014 அன்று நடைபெறவுள்ள உழவர் பெருவிழாவின்போது வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts