Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சின் பார்த்தீனியம் ஒழிப்பில் களைநாசினிப் பிரிவும் களம் இறங்கியது

யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பார்த்தீனியத்தை ஒழிக்கும் பணியில் வடக்கு விவசாய அமைச்சு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்றை உருவாக்கி வேலைக்கு உணவு, ஒரு கிலோ பார்த்தீனியத்துக்கு 10 ரூபா போன்ற அணுகுமுறைகளைக் கடைப்பிடித்த வடக்கு விவசாய அமைச்சு அதன் அடுத்த கட்டமாக களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (10.09.2014) ஊரெழுவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அங்கு உரையாற்றுகையில்,

செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையிலேயே பார்த்தீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிடுங்கி அழிக்கும் முறைகளையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளோம். நாம் முன்னெடுத்த வேலைக்கு உணவு, பார்த்தீனியத்துக்குக் காசு கொடுத்துக் கொள்வனவு செய்தல் போன்ற நடைமுறைகளின் மூலம் பார்த்தீனியம் ஒழிப்பில் கணிசமான அளவு வெற்றியும் கண்டிருக்கிறோம்.

அண்மையில் பெய்த சிறு மழையின் பின்னர் முளைக்கத் தொடங்கியிருக்கும் பார்த்தீனியத்தை அது முற்றாக வளர்ந்து எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்னாக விரைந்து ஒழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு உள்ளது. அதன் காரணமாகவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் களைநாசினிகளை விசிறி அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஆனாலும், தொடர்ச்சியாக களைகொல்லி இரசாயனங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முளைக்கத் தொடங்கியிருக்கும் பார்த்தீனியத்தை விவசாய அமைச்சு வந்து அழிக்கும் என்றோ, இன்னொருவர் வந்து அழிக்கவேண்டும் என்றோ காத்திராமல் தாங்களாகவே ஆரம்ப நிலையிலேயே கைகளினால் பிடுங்கி அகற்றுவதற்கு முன்வரவேண்டும்.

எவருடைய வீட்டு வளவிலேனும் விவசாய நிலத்திலேனும் பார்த்தீனியம் காணப்பட்டால் அவற்றை அழிப்பது காணி உரிமையாளர்களின் கடமை. அழிக்கத் தவறினால் இலங்கை அரசின் 1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் தாவரப்பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிமையாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைவாசமும், ஒரு இலட்சம் ரூபா வரை தண்டப்பணமும் அறவிடலாம். பொதுநன்மை கருதி 2015 தை முதலாம் திகதியில் இருந்து இந்தச் சட்டத்தை வடமாகாணத்தில் அமுல்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின்போது களைநாசினி விசிறும் பணியாளர்களுக்கு களைநாசினிகளைப் பாதுகாப்பாக எவ்வாறு விசிறுவது என்று விளக்கமளிக்கப்பட்டதோடு, அவர்களின் தற்காப்புக்கான உடைகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதன்போது வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறிபாலசுந்தரம், விவசாயப் போதானாசிரியர் க.தனபாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

1

3

4

6

7

Related Posts