Ad Widget

வடமாகாண மீன்பிடித்துறைக்கு ‘எட்கா’வால் ஆபத்து?

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கைச்சாத்திடப்படுமாயின், இந்திய மீனவர்களுக்கு, வருடத்தில் 85 நாட்கள், இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில், எவ்வித அனுமதியின்றியும் மீன்பிடிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றுத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர்கள், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஐக்கிய மீனவர் சங்க சமாசத்தின் தலைவர் எஸ்.எமிதியாஸ் பிள்ளை, “தற்போது, வாரத்தில் மூன்று தினங்கள், வடமாகாணக் கடற்பரப்புக்கு வரும் இந்த மீனவர்கள், அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதால், மாதமொன்றுக்கு 20 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

“ஆயினும், இந்திய மீனவர்களின் தற்போதைய மீன்பிடி முறையினால், ஒரு கோடி ரூபாய் கூட நட்டம் ஏற்படுவதில்லை என்றே, மீன்பிடித்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. ஆனால், வாரத்தில் மூன்று நாட்கள், இலங்கைக் கடற்பரப்புக்கு வரும் இந்திய மீனவர்களில் சுமார் 700 முதல் 1200 வரையான றோலர் படகுகள், அள்ளிச் செல்லும் மீனின் அளவு குறித்து, வடக்கு மீனவர்களே அறிவர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இலங்கைக் கடற்பரப்பில் 85 நாட்கள் மீன்பிடிப்பது தொடர்பில், இதற்கு முன்னரும் யோசனை கொண்டுவரப்பட்டிருந்தது. இதற்கு, வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி, தெற்கிலிருந்த மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், நின்றுபோயிருந்த அந்த யோசனை, எட்கா மூலம், மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது. இதனால், வடக்கின் மீன்பிடித்துறை, முற்றாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.

Related Posts