Ad Widget

வடமாகாண மாற்றுதிறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டை

வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால் தமது அவயவங்களை இழந்த பலர் விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

எனினும், இவர்களின் எண்ணிக்கை, விசேட தேவையின் தன்மை போன்ற தரவுகள் தெளிவாக இல்லை. இதற்காக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் தரவுகள் திரட்டும் வேலைத்திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக தொண்டர்களை வேலைக்கு அமர்த்தி வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் விபரங்கள் கணினிமயப்படுத்தப்படவுள்ளன.

அந்த தரவுகளின் அடிப்படையில் சுகாதார திணைக்களத்தினால் விசேட நடமாடும் மருத்தவ சேவைகள் நடத்தப்பட்டு, அவர்கள் தொடர்பாக மருத்தவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ நிலை தொடர்பான விபரங்களுடன் விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதன்மூலம் விசேட தேவையுடையவர்களுக்கான தேவைகளை இலகுவாக இனங்காண முடியுமெனவும் அவர்களுக்கான விசேட செயற்றிட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தவும் உத்ததேசித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts