Ad Widget

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் நியமனம்!

வடமாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (2) வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் ரூ.வரதலிங்கம்,மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் கு.பிரேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உள்ள மனப்பொருளியல் வெற்றிடத்திற்காக 26 பட்டதாரி ஆசிரியர்களும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு 46 ஆசிரியர்களுமாக மொத்தமாக 72 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு வெலிஓயா கோட்டம், வவுனியா தெற்கு வலயம் ஆகிய இடங்களுக்கே மேற்படி சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள மொழி பாடசாலைகளுக்கு சிங்கள மொழிக்காக 18 ஆசிரியர்களும் ஆங்கிலம் 1, வரலாறு 3, குடியுரிமைக் கல்வி 9, புவியியல் 3, தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் 1, விவசாயம் 1, சங்கீதம் 1, நடனம் 1,வழிகாட்டலும் ஆலோசனையும் 3 என 46 சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண நிர்வாக உதவிச் செயலாளர் பா.அபிராமி, திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் சி.ஞானகாந்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாக உத்தியோகத்தர் லோ.விஸ்வநாதன், கணக்காளர் தே.சுரேஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts