Ad Widget

வடமாகாண தொண்டர் ஆசியர் நியமன விவகாரத்தில் எம்மால் எதுவும் செய்ய முடியாது

வடமாகாண தொண்டர் ஆசியர்களை, ஆசிரியர்கள் நியமனத்துக்குள் உள்வாங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பிரமாணக் குறிப்பை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களின் விபரங்கள், ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அமைச்சரவை பத்திரம் மூலம் மத்திய அமைச்சு இவர்களை உள்வாங்க முடியும்.

அவ்வாறு மத்திய அரசாங்கம் உள்வாங்கினால் 3,000 பேர் உள்வாங்கப்படுவார்கள்.

2014ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் அவர்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் அனைவருடைய விபரங்களும் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

‘கடந்த காலங்களில் வட மாகாணத்தில் நிலவிய ஆசிரிய வெற்றிடங்களுக்கு 1,900 ஆளணிகளை இணைத்துள்ளோம். தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களையும் உள்வாங்கியுள்ளோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts