Ad Widget

வடமாகாண சபை பேரவை செயலகத்துக்கு இணையத்தளம்: பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண சபையின் செயற்பாடுகளை வெளியிடக்கூடிய வகையில் வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்துக்கு தனியான இணையத்தளம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை(17) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, அவைத்தலைவர் இந்த பிரேரணை முன்வைத்தார்.

இதேவேளை, வடமாகாண சபையின் கீழ் பணியாற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தமது பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் கோரிய பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டது.

பாஷையூர் தம்பு ஞாபகார்த்த சனசமூக நிலையம், டக்ளஸ் தேவானந்தா சனசமூக நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனை பழைய பெயருக்கு மாற்றும்படி ஆளுங்கட்சி உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி கேள்வியாக முன்வைத்தார். இதனை பழைய பெயராக மாற்றும்படி பிரேரணையாக அவைத்தலைவர் சபையில் முன்வைக்க அந்தப் பிரேரணையும் நிறைவேறியது.

அவையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனால் முன்வைக்கப்பட்ட, கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள கரைத்துரைப்பற்று பிரதேச சபை காணியை, பிரதேச சபைக்கு வழங்கவேண்டும் என்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்வைக்கப்பட்ட, ஓட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலையை வடமாகாண சபையின் ஆளுகைக்குட்படுத்தி இயங்கச் செய்யவேண்டும் என்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவால் முன்வைக்கப்பட்ட, திவிநெகும சட்டத்திலுள்ள பிரிவுகள் நீக்கப்படவேண்டும் என்ற பிரேரணை, உறுப்பினர் சுந்தரலிங்கம் சுகிர்தனால் முன்வைக்கப்பட்ட குத்தகை நிறுவனங்கள் மாலை 6 மணிக்கு பின்னர் வீடுகளுக்குச் சென்று நிதி வசூலிக்கக்கூடாது ஆகிய பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.

மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனால், முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்களை உருவாக்க மூன்று பேர் கொண்ட சட்டவல்லுநர் குழுவொன்றை சபைக்கு நியமிக்கக்கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையில், அமைச்சரவையின் சட்ட ஆக்கம் குறித்தும் இந்தக் குழு தெரிவிக்கவேண்டும் என்பதை இந்தப் பிரேரணையில் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கேட்டதையும் உள்ளடக்கி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

திக்கம் வடிசாலையின் உரிமத்தை பனை அபிவிருத்திச் சபையிடமிருந்து வடமராட்சி தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் கொத்தணிக்கு மீளவும் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற பிரேரணை, உறுப்பினர் வே.சிவயோகனால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, அடுத்த வடமாகாண சபை அமர்வை ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts