Ad Widget

வடமாகாண சபை பிரேரணைகளை நிறைவேற்றவென தனிப் பிரேரணை வேண்டும்

‘வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை செயற்படுத்த வேண்டும் எனக்கோரி மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

chantherakumar

யாழ்ப்பாணம், ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய திறப்பு விழா நிகழ்வு சனிக்கிழமை (28) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தமிழர் அரசியலில் கடந்தகால வரலாறுகளையும் தியாகங்களையும் திரும்பிப் பார்க்கும்போது, அதில் கலாசாரம் இல்லை. அரசியலில் நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் எங்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் எங்கள் கட்சி பற்றியும் அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன’ என்று கூறினார்.

‘கடந்த காலங்களில் என்ன நடந்தது?, யார் யார் என்னென்ன தியாகங்களை செய்தனர் என்ற அடிப்படை வரலாற்றை தெரிந்துகொள்ளாதவர்கள் எல்லாம் தற்போது அரசியலில் மற்றவர்களை விமர்சித்து வருகின்றமை வேடிக்கையானது. தமிழர் அரசியலில் பொறுப்புக் கூறுகின்ற தன்மையும் இல்லாது போய்விட்டது.

தமிழ் மக்கள் தாங்கள் கூறுகின்ற அரசியல் வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும். ஆனால், அந்த வழிமுறை தோற்றுப்போனால் திருப்பி கேள்வி கேட்கக்கூடாது. அதற்காக தாங்களும் பொறுப்பு கூறமாட்டோம் என்ற நிலைப்பாடு தொடர்ந்தும் இருப்பது எமது மக்களையும் மேலும் பின்னடைவுக்குள்ளே கொண்டுசெல்லும் நிலைமையை ஏற்படுத்துகிறது.

எனவே, இவ்வாறான அரசியல் கலாசாரத்துக்குள் இருந்து மக்கள் விடுபட்டு, சுயமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் விடயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆயுத போராட்ட காலத்துக்கு பின்பு ஜனநாயக அரசியலிலும்; நாம் அரசியல்வாதிகள் போன்றல்லாமல் அரசியல் போராளிகளாகவே செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் போராடி வருகின்றோம்’ என்றார்.

‘மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் காலம் பாராது உழைகின்றோம். ஏனைய அரசியல்வாதிகள் போன்று அறிக்கைகளை மட்டும் விடும் அரசியலை மேற்கொள்ளவில்லை. அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அதியுயர் சபையாக தேசிய ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த சபை அமைச்சரவையை விட அதிகாரமிக்கது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கின்ற போதிலும், அந்த சபையில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமூகமளிக்கவில்லை.

கூட்டத்துக்கு கூட்டமைப்பு செல்லாத காரணத்தால் தமிழர்களின் பிரச்சினையை விட்டு வேறு விடயங்களைப் பற்றி பேசுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார்கள்.

தமிழர்களின் பிரச்சினையை எடுத்துச்சொல்லி தீர்வு காணவேண்டிய அதியுயர் சபையில் அதனை செய்யாத கூட்டமைப்பு வேறு எந்த இடத்தில் செய்யப்போகிறார்கள். இது தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்யும் துரோகமாகும்.

சபையின் கூட்டங்களுக்கு சென்று தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசி அதற்கு தீர்வு கிடைத்துவிட்டால், தமது அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படும். அரசியல் தீர்வு மக்களுக்கு கிடைத்துவிட்டால், அவர்கள் கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்ற அச்சத்திலேயே கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தில், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறையில் செயற்படவேண்டும். அதியுயர் சபையாக உள்ள தேசிய ஆலோசனை சபையை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Posts