Ad Widget

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி கடிதம்!

வடமாகாண சபை உறுப்பினர்கள், தமக்கு பாதுகாப்புத் தேவை என்று கோரும் பட்சத்தில் அவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (31) தெரிவித்தார்.

CVK-Sivaganam

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வடமாகாண சபை உறுப்பினர் மூவருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு ஜூன் மாதத்துடன் மீளப்பெறப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனுக்கு இனந்தெரியாத நபர்கள் துன்னாலை சந்தியில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். இது தொடர்பாக சுகிர்தன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், எங்களுக்கும் தெரிவித்திருந்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்தனர்.

இந்த சம்பவங்களின் அடிப்படையிலும், கடந்த 16ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தின் அடிப்படையிலும் வடமாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அவர்கள் கோரும் பட்சத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts