Ad Widget

வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு

sivajilingam_tna_mpபாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. அதில் பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவின் ஊடகப் பேச்சாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இறுதிக் கட்டப்போரில், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை அஞ்சலித்து, நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இந்த ஆண்டு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்கள் நினைவாக எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுகளும் செய்ய முடியாதென்று எச்சரித்துள்ள இராணுவத்தினர், அதையும் மீறி நிகழ்வுகளை நடத்துவோர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையிலேயே இன்று முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடபகுதியில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் சுடரேற்றல் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள அவர், அதனைத் தொடந்து நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இருநாள்களும் நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களை கோரியுள்ளார்.

இன்று வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெறும் சுடரேற்றல் நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் அணி திரளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts