Ad Widget

வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு பூரணப்படுத்தப்படவில்லை

அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் பூரணப்படுத்தப்பட்டு, சபையில் முன்வைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும்’ என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் கொள்கை முன்மொழிவின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வரைபை முழுமைப்படுத்திய வடிவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண சபையில் முன்வைக்கப்படும் என கடந்த 7ஆம் திகதி அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிணங்க, இன்று செவ்வாய்க்கிழமை (12) அதற்கான தனியான அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் கூடியது. எனினும், வரைபு இன்னமும் பூரணப்படுத்தப்படாமையால் இன்று அது சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் முன்மொழிவில் பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்கான பரிந்துரைகள் உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைச் சீர்செய்ய வேண்டியுள்ளமையால் கொள்கை வரைவு முன்மொழிவு தாமதமாகின்றது எனவும் அவைத் தலைவர் கூறினார்.

குறிப்பாக சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில உள்ளடக்கங்களை கூறியுள்ளனர் என்றார்.

இதனால், இன்றைய விசேட அமர்வானது மாற்றப்பட்டு, வழமையான வடமாகாண சபை அமர்வாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts