Ad Widget

வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் சம்பந்தனிடம் நேரில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் 7ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் நேரில் கையளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் வடமாகாண மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குறித்த 19பேர் கொண்ட குழு நேற்றயதினம் மாலை 5.30 மணி தொடக்கம் 8 மணி வரையில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட யோசனைகளை நிறைவு செய்வது தொடர்பாக பேசியிருந்தது.

இச்சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளை முன்வைப்பதற்கான குழு இன்றைய தினம் கூடியிருந்தது. இதனடிப்படையில் எமது யோசனைகளை பூர்த்தி செய்து எதிர் வரும் 7ம் திகதி மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும்.

அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படும். மேலும் 19பேர் கொண்ட குழு 3 உப குழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களின் வரலாற்றை அறியவும், அரசியல் ரீதியான கொள்கைகளை அறியவும், தமிழர்கள் தனித்துவமாக எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறியவும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த உப குழுக்களின் கருத்துக்கள் அடிப்படையில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு அந்த கருத்தே சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts