Ad Widget

வடமாகாண சபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழ் கூட்டமைப்புக்கு தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பு

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றமைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் உட்பட தமிழக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

tna_members_jaffna

கலைஞர் வாழ்த்து

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் உலக தமிழரின் விருப்பத்துக்கு ஏற்ப 13 ஆவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.

ராஜபக்ச கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு சிங்கள அரசு செயல்படுவதாக ராஜபக்ச செய்த பொய்ப் பிரச்சாரத்தையும் இராணுவம், போலீஸ் மற்றும் வன்முறையாளர்களைக் கொண்டு ஏவிய அடக்குமுறை அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குகள், சிங்கள அரசின் அராஜாக அரசுக்கு எதிரான வாக்குகளே ஆகும்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் சரியான சந்தர்ப்பத்தில் சுதந்திர அயர்லாந்தை டிவேலாராவும் சின்பென் இயக்கமும் பிரகடனம் செய்ததுபோல, அத்தகைய வரலாறு தமிழ் ஈழத்திலும் மீண்டும் திரும்பும் என்பதுதான் காலத்தின் தீர்ப்பாக இருக்கும்.என்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துவதற்காக இந்த வடக்கு மாகாணத் தேர்தலை ராஜபக்ச அரசு நடத்தியது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

ராஜபக்ச கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80வீத வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலுச்சேர்த்து விடும் என்பதால், அக் கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என ராஜபக்ச கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால் ராசபக்ச கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்.

தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கம்யுனிஸ்ட் செயலாளர் வாழ்த்து

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளமை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

மொத்த வாக்குகளில் 84 சதவீத வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் 30 இடங்களை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தலையொட்டி இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து இருந்ததாக புகார்கள் எழுந்தபோதும், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து, ஜனநாயக ரீதியில் தங்களது தீர்ப்பை அளித்துள்ளனர்.

உரிய அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி தேவை என்ற தங்களது எண்ணத்தை இந்த தேர்தல் மூலமாக தமிழ் மக்கள் உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

மக்களின் இந்த தீர்ப்புக்கு இலங்கை ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நீர்த்துப்போகச்செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. இது தவறான பாதை என்பதை மக்கள் தற்போது தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனி, இலங்கை அரசாங்கம், மக்களின் மகத்தான நம்பிக்கையை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போடு அதிகாரப் பரவலுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்திடவேண்டும், 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பகிர்வு அளித்திட இலங்கை அரசை இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

திருமாவளவன் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 36 இடங்களில் 30 இடங்களை அது வென்றிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் விக்னேஸ்வரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். அந்த ஒற்றுமையை முன்னோக்கி எடுத்துச் செல்வது த.தே.கூ வின் முன்னால் உள்ள சவால் ஆகும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts