Ad Widget

வடமாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் ஆளணி பற்றாக்குறை

வட மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் அமைந்துள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுவதாகவும், அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவ் கூறியுள்ளார்.

தாதியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல வைத்தியப் பிரிவுகளை மக்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்க பல சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கையாக ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளபோதிலும், ஆளணி பற்றாக்குறையைப் போக்க முடியாதிருப்பதாவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வைத்தியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வைத்தியர் இல்லாத வைத்தியசாலைகளுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுபவர்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் அங்கு சென்று பணியாற்றும் வகையில் ஒழுங்குகள் செய்திருப்பதாகவும், எனினும் அது வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதிய அளவில் பயன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியத் துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் மாதாந்தம் நடைபெறும் மாகாண சபைகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கான கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சரிடம் இது குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ள ஆயிரத்து 200 வைத்தியர்களில் சிலரை வடமாகாணத்திற்கு நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியுடனான கடந்த மாதச் சந்திப்பின் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts