Ad Widget

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களுக்கு வாகனங்களை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்கெனப் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை (11.02.2015) நடைபெற்ற வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் வாகனங்களைக் கையளித்துள்ளார்.

3

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்ட கால்நடை அபிவிருத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் வாகனங்களுக்குப் பற்றாக்குறைவு நிலவிவருகின்றது. இதனால், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து முறைப்பாடுகள் செய்தாலும் வைத்திய அதிகாரிகளினால் உரிய நேரத்துக்கு முறைப்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சை வழங்கமுடியாதுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கால்நடை அபிவிருத்தி அமைச்சிடம் வாகனங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து மத்திய கால்நடை அபிவிருத்தி அமைச்சு மிற்சுபிசி ரக வாகனங்கள் எட்டினை வடமாகாண அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.

2

மத்திய அமைச்சால் வழங்கப்பட்டுள்ள எட்டு வாகனங்களில் ஏழு வாகனங்கள் வேலணை, மருதங்கேணி, சாவகச்சேரி, பூநகரி, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மடு ஆகிய பிரதேசங்களுக்குரிய கால்நடை வைத்தியர் அலுவலகங்களுக்கும் ஒரு வாகனம் வவுனியாவில் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலுவலகத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ் வாகனங்கள் குறிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களைக் கையளிக்கும் நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, வடமாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரோடு கால்நடை வைத்தியர்களும், கால்நடை உற்பத்தி சுகாராரத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

நிகழ்வு தொடர்பான படங்களுக்கு..

Related Posts