Ad Widget

வடமாகாண கல்வி வீழ்ச்சிக்கு அரசும் தீயசக்திகளுமே காரணம் – விந்தன்

வடமாகாணத்தின் கல்வி மட்டம் அண்மைக்காலங்களில் வீழ்ச்சியடைந்து செல்கின்றமைக்கு அரசும், அரசியலும், தீயசக்திகளுமே முக்கிய காரணம் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் புதன்கிழமை (01) பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஆ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே விந்தன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கை தேசம் ஆங்கிலேயரிடத்திலிருந்து விடுபட முன்பும் விடுபட்ட பின்பும் இந்த நாட்டில் தமிழினம்; கல்வித்துறையிலும், அரசியலிலும், சட்டத் துறையிலும் கொடிகட்டிப் பறந்த வரலாறு எங்கள் அனைவருக்கும் தெரியும்.

இவற்றை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத பேரினவாதிகள் எங்கள் கல்வி மீது கைவைத்தனர். அதன் எதிரொலியாக போராட்டம் வெடித்தது. போராட்டத்தை காரணம் காட்டி எங்கள் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, மொழி, பொருளாதாரம், நிலம், இருப்பு எல்லாமே சிதைத்தொழிக்கப்பட்டது.

போருக்கு பின்பு எங்களுடைய கல்வி, கலாச்சாரம், விளையாட்டுத்துறை போன்றவற்றை கட்டியெழுப்ப நாங்கள் முனையும் போது அதற்கும் பல்வேறு வடிவங்களில் இடையூறும் தடங்கலும் ஏற்படுத்தப்படுகின்றது.

எங்கள் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் கலாச்சாரத்தை பேணுவதிலும் சுய ஒழுக்க நெறிமுறைகளை பேணுவதிலும் உறுதியாக இருப்பவர்கள் என்பது உலகத்துக்கு தெரியும்.

கல்வியை நோக்காகக் கொண்டு செயற்படும் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் குளிர்பானங்களிலும் குளிர்கழிகளிலும் இனிப்புப் பண்டங்களிலும் போதையூட்டும் மருந்துகளை கலந்து விற்பதன் மூலம் மாணவர்களுடைய சுயசிந்தையையும் ஒழுக்கநெறி முறைகளையும் அற்றுப் போகச் செய்து, கல்வி மீது ஆர்வமின்மையும் ஏற்படுத்துவதற்கு சதி முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

சில தீய சக்திகள் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து நன்கு திட்டமிட்டு செயற்படுவதையும் இதன் பின்னணியிலிருந்து வலுவான ஒரு சக்தி செயற்படுவது போல் ஒவ்வொரு நிகழ்வுகளும் அமைகின்றன.

தொடர் பாலியல் பலாத்காரம், வாள்வெட்டுச் சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் வீதிகளிலே கூடி நின்று மாணவர்களை மக்களை அச்சுறுத்துதல் அனைத்து மலிந்து விட்டன. இவையெல்லாம் எங்கிருந்து ஊக்கிவிக்கப்படுகிறது?, இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள்?, என்ற விடயங்கள் எல்லாம் இப்போது மெல்ல மெல்ல கசிந்து வருகின்றன என்றார்.

Related Posts