Ad Widget

வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற விருப்பம் வெளியிட்டார் சங்கிலி மன்னனின் வாரிசு

வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற சங்கிலி மன்னனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.

raja

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், வடமாகாண ஆளுநராக தன்னை நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தன் மீதான தடையை நீக்கி அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தான் நாடு திரும்பி வடமாகாண மக்களுக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த மாதம் நெதர்லாந்துக்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து ராஜா றெமிஜியஸ் கனகராஜா பேசியுள்ளார்.

இச்சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட அவர், நெதர்லாநதுக்கான சிறிலங்கா துதரகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து, இலங்கையின் அரசியல் மற்றும் வடக்கின் நிலைமைகள் குறித்துப் பேசினேன்.

வடமாகாணத்துக்கு ஒரு இராணுவ ஆளுநர் தேவையில்லை என்றும் சிவில் ஆளுநரே தேவை என்றும், அப்பணியை நான் ஆற்றத் தயாராக இருப்பதாகவும் இதன்போது அவரிடம் கூறினேன்.

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியே வடமாகாணத்தை ஆட்சி செய்கிறார்.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் சிறிலங்காவின் மற்றொரு படைத்துறை அதிகாரியே மீண்டும் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். இது தொடரக் கூடாது. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்தால் ஒரு அமைச்சராகவோ அல்லது வடமாகாண சபைக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு தூதுவராகவோ பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என அவரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் தற்போது வாழ்ந்து வரும் ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts