Ad Widget

வடமாகாணத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு போதாது

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், வடமாகாண மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது.

wigneswaran__vick

புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் தோன்றினாலும் அதை உடனடியாகச் சென்று வைத்தியர்களுக்கு காட்ட நாங்கள் தாமதிக்கின்றோம். அதனால் நோய் நன்றாக முற்றிப்போகின்றது’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, ‘என் மனைவியையும் என் தங்கையையும் புற்றுநோய் என்ற கொடிய நோய்க்குப் பலி கொடுத்தவன் நான்.

அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிக்க கரிசனையும் உடன்பாடும் உரியவனாக நானும் உள்ளேன். எமது நாளாந்த வாழ்க்கை முறைக்கும் புற்றுநோய்க்கும் இடையில் பல தொடர்புகள் இருப்பதை இப்பொழுது கண்டுபிடித்துள்ளார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது காசநோய், மலேரியா போன்றவைதான் இறப்பை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டன. அவற்றைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், 2002ஆம் ஆண்டில் காசநோய், எச்.ஐ.வி, மலேரியா போன்றவற்றால் ஏற்பட்ட மரணங்களைவிட புற்று நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையே உலகளவில் அதிகமாகக் காணப்படுகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே இலங்கையிலும் மதிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது.

அதாவது, புற்று நோய் பற்றிய அறிகுறிகள் தோன்றினாலும் அதை உடனடியாகச் சென்று வைத்தியர்களுக்குக் காட்ட நாங்கள் தாமதிக்கின்றோம். அதனால், நோய் நன்றாக முற்றிப் போகின்றது. அப்போது எது செய்தாலும் பொதுவாக சிகிச்சை வெற்றியளிப்பது இல்லை. என்றாலும் இப்பொழுது நோய் தணிப்புச் சிகிச்சை முறையானது தெல்லிப்பளை, யாழ்ப்பணம் புற்றுநோய்ச் சிகிச்சை நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவது நோய் முற்றினாலும் நோயின் வீரியத்தைத் தவிர்த்து ஓரளவுக்குத் தரமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கின்றது.

உயர் புற்று நோய் நிகழ்வு விகிதம் பெரும்பாலும் ஆண்களிலும் பார்க்க பெண்களிலேயே காணப்படுகின்றது. இதற்குப் பிரதான காரணியாக பெண்களிலே ஏற்படும் மார்பகப் புற்றுநோயின் உயர் நிகழ்தகவு வீதமாகும்.

உடற்பயிற்சிகளில் நாள்தோறும் ஈடுபடவேண்டும் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். இயற்கையிலேயே எமது யாழ்ப்பாண மக்கள் இயல்பான எளிய வாழ்க்கைக்கு பரீட்சயமானவர்கள். ஆனால் திடீர் வாழ்க்கை மாற்றங்கள் எமது உடலுக்கு ஆரோக்கியமற்ற நிலையையும் இயல்பற்ற பழக்க வழக்கங்களையும் அறிமுகக்படுத்தியிருந்தன. இனியாவது எமது வாழ்க்கைமுறை மீண்டும் பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும்’ என்றார்.

Related Posts