Ad Widget

வடமாகாணத்தில் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்குவது என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்க வேண்டும்.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த குழுவை உருவாக்க வேண்டும். அதில் வடமாகாண சபை உறுப்பினர்கள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் , பொலிசார் , சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் ,ஆகியோரை உள்ளடக்கி இந்த குழு உருவாக்கபடவேண்டும் அந்த குழுவின் ஊடாக பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரணையை முன் மொழிந்தார்.

அதனை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய எதிர்ப்பின்றி பிரேரணை ஏக மனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

குறித்த பிரேரணை வழி மொழியப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் இந்த குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைக்க வேண்டும்.துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் தொடர்பிலான செய்திகளை வெளியிடும் போது பொறுப்புணர்ச்சியுடன் வெளியிட வேண்டும். இந்த செய்திகளை ஒரு வரையறைக்குள் வெளியிட வேண்டும் எனவே இந்த குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரினார்.

எதிர்கட்சி உறுப்பினரின் அந்த கோரிக்கையையும் சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டு விசேட நடவடிக்கை குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளவது என தீர்மானிக்கப்பட்டது.

Related Posts