Ad Widget

வடமாகாணத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமாகாண மக்களுடையே ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிரேஸ்ட வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா, வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பல தொற்று நோய்கள் தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மூலம் குறைக்கப்பட்டன.

ஆனால் தொற்றாத நோய்கள் எமது சமுதாயத்தில் அதிகரித்துள்ளன. மிகமுக்கியமாக சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் 400 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 120 பேர் சிகிச்சை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், தினமும் 2 நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இலங்கையை பொறுத்தவரையில் அநுராதபுரம், பொலநறுவை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவுள்ளனர்.

இதில் வடமாகாணத்தின் 4 மாவட்டங்கள் அடங்குகின்றன. கூடுதலான பாதிப்பு ஏன் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களில் 60 தொடக்கம் 70 வரையான நோயாளர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர்.

எமது அன்றாட வாழ்ககை முறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உப்பு, சீனி கூடிய சுகாதாரமற்ற உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சி இன்மை, புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்ற செயற்பாடுகளால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்த நான்கு செயற்பாடுகளையும் தடுத்தால் சிறுநீரக பாதிப்பு வராமல் தவிர்த்துக்கொள்ள முடியும். அத்துடன், தேவையற்ற மருந்து பாவனையைiயும் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டால் இரத்த உரித்தான, நோய் இல்லாத ஒருவர் சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும். அந்த சத்திரசிகிச்சைக்கு 1.2 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும். சத்திரசிகிச்சை செய்யமுடியாவிட்டால், இரத்த சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் இருந்து 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் பரிசோதனை நடவடிக்கைக்கு வருகின்றனர். பிராந்திய சுகாதாரப் பணிமனைகளில் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள முடியும்.

சமீப காலங்களில் விளம்பரங்கள் மூலம் சிறுவர்களின் செயற்பாடுகள் மாற்றமடைந்து வருகின்றன. தேவைக்கு மாத்திரம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமய சம்பந்தமான செயற்பாடுகளை கடைப்பிடித்து உணவுப் பழக்க வழக்கங்களை ஒழுங்குமுறையில் மேற்கொள்வதன் மூலம் இளம் சமூகத்தினரிடையே இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

Related Posts