Ad Widget

வடமாகாணத்தில் சமாதானம் காக்கப்படுகிறது: டீ.ஐ.ஜி

வடமாகாணத்தில் தற்போது 100 வீதம் சமாதானம் காக்கப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பிரத பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யுத்த காலத்தில் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு காட்டுச் சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. நாட்டுச் சட்டத்தில் அவ்வாறு கடுமையான தண்டனை வழங்க முடியாது’ என்றார்.

‘காட்டுச் சட்டம் என்பது 14ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இருந்தது. எழுத்து மூலமாக இல்லாமல் பலம் வாய்ந்தவர்கள் பலம் குறைந்தவர்களை தண்டிப்பதே அந்தச் சட்டம். அதன் பிற்பாடே நாட்டில் எழுத்து மூலமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. நாட்டிலுள்ள எழுத்துமூலமான சட்டத்தின் பிரகாரமே குற்றச்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். அந்த அதிகாரங்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஒருவர் சந்தேகநபரே. அவரை குற்றவாளியெனக்கூற முடியாது. ஒரு குற்றம் நடைபெற்றால் அது தொடர்பில் கைது செய்யப்படுபவரை கொலை செய்ய முடியாது. அவருக்கு நீதிமன்றமே தண்டனை வழங்க முடியும். அந்த அதிகாரம் வழங்கப்பட்டவரே அந்தத் தண்டனையை வழங்க முடியும்’ என்றார்.

மாணவி கொலை சந்தேகநபர்களின் டி.என்.ஏ அறிக்கைக்காக காத்திருப்பு

புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என்றார்.

கலகத்தில் ஈடுபட்டதாலேயே இந்திய சுற்றுலாப் பயணி கைதுசெய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 130 பேரில் உள்ளடங்கும் இந்திய சுற்றுலா பயணியும் கலகத்தில் ஈடுபட்டதாகவும் யாழ். நீதிமன்றத்துக்கு முன்பாக கூடியவர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு கற்கள் வீசி, வாகனங்களையும் உடைத்தனர். அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுவீசி கலகத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருந்தனர்.

கலகத்தில் ஈடுபடாத மாணவர்கள், அப்பாவிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,

கைது செய்யப்பட்ட 130 பேரும் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே என பொலிஸார் கூறுகின்றனர். கைதுக்கு உள்ளானவர்கள் அப்பாவிகள் என்கின்றனர். இதற்கான தீர்ப்பை நீதிமன்றமே வழங்கவேண்டும். பாடசாலை சீருடையுடன் அங்கு எவரும் கைது செய்யப்படவில்லை. குழப்பத்தில் ஈடுபடாத எவரையும் கைது செய்யவில்லை என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டவர்களில் இந்திய சுற்றுலாப்பயணியும் உள்ளதாக இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரும் கலகம் விளைவித்தவரா? எனக் கேட்டபோது,

இந்திய சுற்றுலாப் பயணியும் கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டார் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

Related Posts