Ad Widget

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறை

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிவர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கால்நடை அபிவிருத்தி போதனாசியர்களால் மேற்கொள்ளப்படும் முக்கியமான வேலை, செயற்கைமுறை சினைப்படுத்தல் ஆகும். போதனாசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தனியார் நிறுவனங்களுக்கு செயற்கைமுறை சினைப்படுத்தல் பயிற்சியை வழங்கி அவர்களை எமது வேலைத்திட்டத்தில் இணைத்துள்ளோம்.

இவர்களுக்கு பண்ணையாளர்கள் கொடுப்பனவை வழங்கவேண்டும். அரசாங்கத்தினூடாக சினைப்படுத்தலுக்கு 50 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் தனியார் ஊடாக செய்யும் போது 250 ரூபாய் தேவைப்படுகின்றது.

இப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டால் எமது திணைக்களத்தின் ஊடாகவே இதனைச்செய்ய முடியும். இந்த போதானாசிரியர்கள் இரண்டு வருட கால்நடைத்துறை டிப்ளோமா கற்றை நெறியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த கற்கைநெறி பூர்த்தி செய்தவர்கள் இல்லாத காரணத்தால் க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் 3 பாட சித்தியடைந்தவர்களை உள்வாங்குகின்றோம்.

அவர்களுக்கு தற்காலிக நியமனங்கள் வழங்கி, அதற்குரிய சம்பளமும் வழங்கப்படுவதுடன், 2 வருட டிப்ளோமா கற்கை நெறிக்கும் குண்டகசாலைக்கு அனுப்புகின்றோம்.

இரண்டு வருட கற்கைநெறியை நிறைவு செய்தவுடன் நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது. தற்போது 120 போதனாசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 60 பேர் மாத்திரம் உள்ளார்கள். வவுனியா மாவட்டத்தில் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிப்பதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களின் ஒப்புதலுடன் வடமாகாணத்தில் இந்த கற்கை நெறியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த காலங்களில் நிலவி வந்த கால்நடை வைத்தியர் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 34 வைத்திய நிலையங்கள் அமைந்துள்ளன.

இவற்றுக்கு 78 வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில் 43 வைத்தியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யுமிடத்து எமது திட்டங்களையும் சேவைகளையும் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts