Ad Widget

வடமாகாணத்தில் அரச துறையில் இன்று 350 பேருக்கு நியமனம்

Job_Logoவட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 350 பேருக்கு இன்று அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது .

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நியமனம் வழங்கும் வைபவத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள் உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கிறது .

மத்திய அரசால் வட மாகாண சபைக்கு இணைக்கப்பட்ட 120 பட்டதாரி களுக்கு நிரந்தர நியமனங்களும், வட மாகாண சபையில் கடமையாற்றும் வகையில் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 230 பேரும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவும் உள்ளனர் .

வட மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாயத்துறைகளுக்கே கூடுதல் நியமனங்கள் இதன் போது வழங்கப்படவுள்ளன. வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவினால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 350 பேரே இன்று அரச துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வட மாகாண சபை செயற்பட தொடங்கப்பட்ட பின்னர் மாகாண சபையின் ஊடாக அரச துறைக்கான முதற் தடவையாக நியமனங்கள் வழங்கப்படுவது இதுவாகும். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கான நியமனங்கள் தேர்தலை கருத்திற் கொண்டு இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நியமனங்களை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் மூன்று நெறிப்படுத்தலுக்கு பின்னர் தமக்குரிய அமைச்சுடன் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்கான மும்மொழி பயிற்சிகளும் தகவல் தொழில் நுட்ப பயிற்சிகளும் மாவட்டங்களிலுள்ள பயிற்சி நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் எல் . இளங்கோவன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .

Related Posts