Ad Widget

வடமராட்சி கிழக்கு மணல் அகழ்வு தொடர்பில் பிரதமர் அறிக்கை கோரினார்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தொடர்பிலான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (25) கூறினார்.

thuvarakeswaran-manal

வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களான, அம்பன், குடத்தனை, நாகர் கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள மணல் அகழ்வு பிரதேசங்களை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, வடபகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் 9,000 தொழிலாளர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கவனத்திலெடுத்த பிரதமர் அது தொடர்பில் அறிக்கையை என்னிடம் கோரியிருந்தார். அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை (25) அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டேன்.

வடமாகாண விவசாய அமைச்சரின் கீழுள்ள கூட்டுறவு சங்கங்களின் கீழ், மணல் அகழ்வு நடவடிக்கைகளை கொண்டு வருவதற்கான பொறிமுறையை மேற்கொள்ளவுள்ளோம். அதுவரையில் யாழ். மாவட்ட செயலகத்தின் கீழான நிறுவனம் மூலம் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் வளச்சுரண்டல், வள அபகரிப்பு என்பன பெருமளவில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வு நடவடிக்கையை முன்னாள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா கைவிடவேண்டும்.

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பிரச்சினையால் கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் கூட இடம்பெற்றிருந்தன. இனிவருங்காலங்களில் இத்தகைய நடவடிக்கையை கைவிடவேண்டும். இல்லையேல் மணல் அகழ்வுக்கு எதிராக பாரதூரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ரஜீஸ் என்பவர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார் என அவர் கூறினார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் மணல் அகழ்தல் மற்றும் அவ்விடத்திலுள்ள மணலைக் கொண்டு செல்லல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்துக்கு, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பருத்தித்துறை பொலிஸார் இடைக்கால தடையுத்தரவை கடந்த 16ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts