Ad Widget

வடமராட்சி கிழக்கு மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய ரோலர்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதோடு கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கக் கோருதல் போன்ற 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்று வருகின்றது.

நாட்டில் எமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் காபெற், கொங்றீற் வீதிகள் போடப்பட்டு அதி சொகுசு வாகனங்கள் பயணிக்கின்ற நிலையில் போராலும், சுனாமியாலும் முழுமையாக பாதிக்கப்பட்டு உயிர்சொத்துக்களை இழந்த நிலையில் 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யபட்ட எமது வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இப்போதும் குன்றும் குழியுமாக,சேறுகள் படிந்த பாதையில் தான் பயணம் செய்கின்றோம்.

பிற பிரதேசங்களோடு ஒப்பிடும் போது எமது பிரதேசம் அபிவிருத்திகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.இந்நிலையில் எமது பிரதேச அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் நேரடியாகவும்,கடிதம் மூலமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அவை எவையும் முழுமையாக 5வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை.

இவை தொடர்பில் மத்திய அரசு,மாகாண அரசு,உள்ளுராட்சி அமைச்சு என்பன அசமந்தப் போக்கிலே செயற்படுவதாக உணர்கின்றோம்.

எனவே நாம் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்வர்களாக இருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.எனவே குறித்த பிரதேச அபிவிருத்தி புறக்கணிப்பை தடுக்க 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கென தனியான பிரதேச சபை உருவாக்கல்,நகரங்களை இணைக்கும் பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை அமைத்தல்,வீட்டு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுத்தல், பிரதேச வளங்கள் சூறையாடப்பட்ட இடங்களில் வளப்பாதுகாப்பிற்காக மரங்களை நாட்டுதல், வடமராட்சி கிழக்கு இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குதல், எமது பிரதேச கடல்வளங்களை ஆக்கிரமிக்கும் தென்பகுதி மீனவர்களின் நடவடிக்கைகளை தடுத்தல், இந்திய றோலர்களின் அத்துமீறல்கள் கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதை தடுத்தல், மீனவர்களிற்கு நிவாரண உதவிகளை வழங்குதல்,பனை தென்னை வள உற்பத்தியாளர்களது நலன்கருதி ஒரு வெல்ல உற்பத்தி நிலையத்தை நிறுவுதல், விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்குதல்

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
மேலும் குறித்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts