Ad Widget

வடமராட்சி கிழக்கில் வட்டாரங்கள் குறைப்பு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்!- டக்ளஸ் தேவானந்தா

யாழ் குடாநாட்டில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ள வடமராட்சி கிழக்குப் பகுதியில் நான்கு வட்டாரங்கள் என தேசிய எல்லை நிர்ணயக் குழு அறிவித்துள்ளமை மீள் பரிசீலைனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும்போது,

வடமராட்சி கிழக்குப் பகுதியானது சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்களாலும், கடந்த கால யுத்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இப் பகுதி பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு உட்பட வேண்டியுள்ளது. எனவே, இதனை முதன்மைப்படுத்திய நடவடிக்கைகளே அவசியமாகும். இந்த நிலையில் ஐந்து வட்டாரங்களாக கொண்டிருக்க வேண்டிய இப் பகுதிக்கு நான்கு வட்டாரங்கள் என நிர்ணயித்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதுள்ளது.

குடத்தனை, நாகர்கோவில், செம்பியன்பற்று, உடுத்துறை, முள்ளியான் என ஐந்து வட்டாரங்களை இப் பகுதிக்கென வகுப்பதன் ஊடாக இப் பகுதியின் அபிவிருத்திப் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும்.

அதே நேரம், வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு தனியானதொரு பிரதேச செயலகம் இருப்பதைப் போன்று, பிரதேச சபை ஒன்றையும் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் அவசியமாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts