Ad Widget

வடபிராந்திய சபையை இரண்டாக பிரித்தமைக்கு எதிராக போராட்டம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய போக்குவரத்துச் சபை அலுவலகத்தை வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என இரண்டாக பிரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை (24) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தனர்.

வடபிராந்திய சபையின் கீழ் கோண்டாவில், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 7 சாலைகள் உள்ளன. அவற்றின் நிர்வாகம் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் கீழ் இருந்தது.

கிளிநொச்சி, கோண்டாவில், காரைநகர், பருத்தித்துறையை யாழ்;ப்பாணம் என்றும், மன்னார், வவுனியா முல்லைத்தீவு சாலைகளை வன்னி என்றும் சாலை நிர்வாகம் வியாழக்கிழமை (23) அமுலுக்கு வரும் வகையில் பிரிக்கப்பட்டது.

யாழ்ப்பாண சாலைகளுக்கு முகாமையாளராக கே.கேதீஸனும், வன்னிச் சாலைகளுக்கு முகாமையாளராக முன்னர் வடபிராந்திய சாலை முகாமையாளராகவிருந்த எஸ்.ஏ.அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது அரசியல் சுயஇலாபங்கள் கருதி, ஆளுங்கட்சி அரசியல்வாதி ஒருவரால் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சாரதிகள், நடத்துநர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தனர். அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், ஒருவார காலத்துக்குள் இதற்கான சரியான முடிவை பெற்றுத்தருவதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஒற்றுமையாக இருக்கும் தங்களை இவ்வாறு பிரிக்கக்கூடாது என்றும், பிரித்தாளும் அரசியல் வேலையை எங்கள் சாலைகளுக்கும் செய்யவேண்டாம் எனக்கூறிய போராட்டக்காரர்கள், ஒரு வாரகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தராவிட்டால் அதன் பின்னர் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்யவுள்ளதாகக் கூறினர்

Related Posts