Ad Widget

வடபகுதி மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ; எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம்

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தறுமாறு கோரி எதிர்க்கட்சி தலைவருக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

N-M-Alaam-Fish

இந்திய இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,இந்திய கூட்டு ஆணைய கூட்டத்தில் இருதரப்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யும் இவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்கட்சித் தலைவரை சந்திக்கவுள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.இந்தச் சந்திப்புக்களின் போது தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தொழில் செய்யும் வேண்டுகோளினை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீலங்கா அரசானது தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள சில விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.தமிழ் தலைவர்களான தங்களிடமும் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்படலாம்.

ஆனால் இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் சமூகமாக வடபகுதி மீனவர்கள் உள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கள் இழப்புகளை தங்களிடம் முறையிட்டு வந்துள்ளனர்.

இதற்கமைய தாங்கள் வடபகுதி மீனவ பிரதிநிதிகளை ஜனாதிபதியுடன் சந்திப்பை கடந்த வருடம் ஏற்படுத்தி வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை அவர் அறியச் செய்தீர்கள். மேலும் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டீர்கள். ஒன்றை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.இதற்கு மேலதிகமாக வெளிநாட்டுப் படகுகள் கையாளும் திருத்தச் சட்டத்தினை அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளீர்கள்.

இதுவிரைவில் சட்டமாக இயற்றப்படவுள்ளது. இவ்வாறான தங்கள் நடவடிக்கைகளை வரவேற்கும் அதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் வடபகுதி மீனவர்கள் படும் துன்பங்களையும் அவர்களின் தொழில் இழப்புக்களையும் தெளிவுபடுத்துமாறு வடபகுதி மீனவர்கள் சார்பாக கேட்டுகொள்கின்றோம்.

இதற்கு மேலதிகமாக கீழ்காணும் தகவல்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில், வட மாகாணப் பொருளாதாரம் மெதுவாக மீண்டெழுந்து வருகின்றது.அதன்படி, 2011 ஆண்டு முதல், நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் அதியுயர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாகாணமாக வட மாகாணம் காணப்படுகின்றது.

இருந்தபோதும் மீன்பிடி உபதுறையின் வளர்ச்சியானது இந்திய (தமிழ்நாடு) மீனவர்களின் அத்துமீறல்களினால் வடபகுதி மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா, இந்திய மீனவர்கள் பாக்ஜலசந்தி, பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா போன்றவற்றில் காலம் காலமாக அன்னியோன்யமாக பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித்து வந்துள்ளனர்.

ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் செய்யப்படும் தொழிலின் வீரியமான அறுவடை காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் அருகி வருகின்றது.

ஆனால் வடபகுதி மீனவர்கள் 1983ஆம் ஆண்டு ஆரம்பித்த சிவில் யுத்தத்தின் பாரிய பாதுகாப்பு கெடுபிடிகளினால் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த முடியாது போனது.

இதன் காரணமாக இலங்கைக்கு உரித்தான பாக்குஜல சந்தியில் அதிகமான கடல் வாழ் உயிரினங்கள் இந்திய மீனவர்களால் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியிலான மீன்பிடித்தல் (றோலர், வள்ளம்) அதிகரித்துவரும் அதேவேளை, வட இலங்கையில் பாரம்பரிய முறையான மீன்பிடித்தலே இன்னமும் இருந்து வருகின்றது.

இதன் காரணமாக, இழுவைப்படகுகள் மூலமான அத்துமீறல்கள் வட இலங்கை மீனவர்களுக்கு வாழ்வாதார இழப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை தமிழ்நாட்டு வர்த்தக ரீதியிலான மீன்பிடித்தலை வளம்பெறச் செய்கின்றது.

இங்குதான் இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே சமத்துவம் அற்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளில் சட்டவிரோதமான மீன்பிடி இலங்கை மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தின்மேல் ஒரு அழிவுதரும் விளைவைக் கொண்டிருக்கின்றது.

மேலும் கடற்றொழில் துறை மற்றும் இலங்கையின் கடலுணவுத் துறைக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்குகின்றது.

இத் துன்பங்கள் போதாதென்று இயற்கையின் சீற்றத்தினால் இப்பகுதி மீனவர்கள் பல இடர்பாடுகளை அனுபவித்து வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்து வந்த எமது மீனவ சமூகமானது அனைத்து செயற்பாடுகளினாலும் மறைமுகமான தாக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய உண்மையான நிலையாகும்.

வடபகுதி மீனவர்கள் பல்வேறுபட்ட காரணிகளால் வாழ்வை தொலைத்து இன்னும் அதனை தேடுபவர்களாக உள்ளனர்.அவர்கள் மீண்டுவர ஸ்ரீலங்கா மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகள் வசதிகளையும், வழிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.உயிர்வாழ ஆதாரமான வாழ்வாதாரத்தை அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் சுயமாக கௌரவத்துடன் உழைத்து வாழவே விரும்புகின்றனர்.

இதற்கு தடைக்கல்லாக இருக்கும் விடயங்களை அகற்றி இவர்கள் வாழ்வு சிறப்பிக்க சம்மந்தப்பட்டவர்கள் உதவிடவேண்டும்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எமது கடல் வளத்தை எமது மீனவர்கள் அனுபவிக்க வாரத்தில் அனைத்து நாட்களும் தொழில் புரிவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.

அத்தோடு வடமாகாண சபையானது இந்திய அரசுடன் எமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பாக நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும்.அதனோடு எமது பகுதி மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts