Ad Widget

வடபகுதி மக்களிடையே அரசாங்கம் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம்:- அசோக் கே காந்தா

வடபகுதி மக்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்புவதற்கு அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்’ என இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா நேற்று தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் பதவியின் பிரியாவிடை நிகழ்வொன்று யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வே. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பிரியாவிடை விருந்துபசார நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உட்பட சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘யுத்தத்திற்கு பின்னர் வடபகுதியில் இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் என பல்வேறு விடயங்களில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றில், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.

இதேவேளை, யுத்தத்திற்கு பின்னர் இலங்கை – இந்திய அரசாங்கத்தின் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கு, இலங்கை மக்களின் பிரச்சினைகளையும், சமாதானமான சூழலையும், உருவாக்கும் வகையில், என்னால் முடிந்தவரை எனது நாட்டிற்கும் இலங்கை நாட்டு மக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டுள்ளேன்’ என்றார்.

‘அத்துடன் இது யாழ்ப்பாணத்திற்கான எனது இறுதி பயணமாக இருந்தாலும், நான் டெல்லியில் வேறு பதவியில் இருந்தாலும் இலங்கையின் வடபகுதி மக்களின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களில் அக்கறை செலுத்துவேன்’ என்றும் அவர் உறுதியளித்தார்.

‘இலங்கையில், இருந்து நான் பிரிந்து சென்றாலும், யாழ்ப்பாணத்தின் பசுமையான நினைவுகளை மறக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றமையையும், சமாதானத்தினையும் உணர்த்தும் வகையில், இன மத வேறுபாடின்றி, வாழ வேண்டும்’ என்றார்.

‘இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் போன்ற செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டு, வடபகுதி மக்கள் சமாதானத்துடன், புரிந்துணர்வுடனும் வாழவேண்டுமென்ற வகையில், அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவிகள் எப்போதும் இலங்கையின் வடபகுதி மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை வலியுறுத்தப்படுமென்றும்’ அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Asok-mavai-daklas

Related Posts