Ad Widget

வடபகுதி கடலை விற்காதீர்கள்: அறவழிப் போராட்டம்

வடபகுதி கடலில் இந்திய டோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய, அறவழிப் போராட்டம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

jaffna_fishermen_pro_

‘அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வடபகுதி கடலை விற்காதீர்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் நடைபெற்றது.

பண்ணையில் அமைந்துள்ள யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திலிருந்து ஆரம்பமான இந்தப் போராட்டம், காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதிக்குச் சென்று, யாழ்.மாவட்டச் செயலகத்தில் முன்பாக, போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனைச் சந்தித்து கலந்துரையாடிய போராட்டக்காரர்கள், மகஜரொன்றையும் கையளித்தனர்.

அதன் பின்னர், மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்துக்குச் சென்ற போராட்டக்காரர்கள், தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜனுக்கும் மகஜரொன்றை கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துமீறும் மீனவர்களை நாமே கைது செய்வோம்

வடபகுதி கடலுக்குள் அத்துமீறலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் அரசாங்கம் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் பாரியளவு முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மாத்திமல்லாது, எல்லைத்தாண்டும் மீனவர்களை கைது செய்து கடற்படையினரிடம் ஒப்படைக்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

‘எம்மால் எதனையும் சாதிக்க முடியும் எனக்காட்டியுள்ளோம். எப்போதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. சர்வதேச கடற்பரப்பில் எல்லைகளுக்கான வரையறைகள் உண்டு. ஆனால், இந்திய மீனவர்களை எல்லைகளை மீறுகின்றனர்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது, தாங்கள் கச்சதீவில் மீன்பிடிப்பதாக பசப்பு வார்த்தைகளை கூறுகின்றனர். அதனை எவ்வாறு ஏற்கமுடியும்.

அரசாங்கத்துக்கு அரசாங்கம் உதவிகள் செய்வது சாதாரணம். இந்திய அரசாங்கம் இலங்கையில் ரயில் பாதை, பாலங்கள் அமைக்கலாம். அதில் நாங்கள் பயணிப்போம். அதற்காக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை ஏற்கமுடியாது.

இலங்கை, இந்திய அரசுகள் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்’ என்றார்.

மீனவப்பிரச்சினை தொடர்பில் டெல்லிக்கு அறிவிக்கப்படும்: ஆ.நடராஜன்

வடபகுதி கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலினால், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மீனவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் மற்றும் பிரச்சினை தொடர்பான முழு விடயங்களும் புதுடெல்லிக்கு அறிவிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார்.

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் புதுடெல்லி ஆகியவற்றுக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம். உடனடி நடவடிக்கை மூலம் ஆக்கபூர்வமான பதிலை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts