Ad Widget

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்பு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது.

colompo-media

தென்னிலங்கை ஊடகவியலாளர் யாழ். ஊடக அமையத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவ்வமைப்பின் ஊடகவியலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

‘வடபகுதியில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன மற்றும் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என்பதை நாம் ஊடக அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அவருடனான சந்திப்பின் போது நாம் பல விடயங்களை வலியுறுத்தியுள்ளோம். அதன்போது, யாழ் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிந்து கொள்ள ஊடக அமைச்சர் வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றது.

அத்துடன் வடக்கில் கொல்லப்பட்ட காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

பத்திரிகையாளர் பிரச்சினை தொடர்பாக ஊடக அமைச்சரிடம் 24 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடகவியலாளர்கள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த விடயங்களை முன்வைத்துள்ளோம்.

தேசிய மட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்து கூற ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். மொழி, இன, மத பேதம் எமக்கு இல்லை. ஏனெனில் நாம் ஊடகவியலாளர்கள். அவ்வாறு பாகுபாட்டுடன் நாம் செயற்படுவதில்லை. நாம் வடபகுதிக்கு வந்த போது பல விடயங்களை அறிந்து கொண்டோம். அதே போல் இங்குள்ள ஊடகவியலாளர்கள் தென்னிலங்கைக்கு வரவேண்டும்.

போர் நடந்த காலங்களில் போர் வேண்டாம் என நாம் குரல் கொடுத்தோம். முன்னைய காலங்களில் தென்னிலங்கையிலிருந்து நாம் இங்கு வர பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். தற்போது ஓரளவு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கை பத்திரிகையாளர்கள் எல்லோரும் நன்றாக உள்ளார்கள் என்றில்லை. அவர்களுக்கும் பிரச்சினை உள்ளது.

எதிர்வரும் மே தின பேரணிக்கு வடக்கு பத்திரிகையாளர்களை இணைக்கவுள்ளோம்.

கடந்த தேர்தலைப்போன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Related Posts