Ad Widget

வடபகுதிக்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – முதலமைச்சர்

வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.

vicky-vickneswaran-cm

ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் ஹகோலியங் ஸு இன்று வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் போது தமது வடபகுதிக்கான விஜயத்தின் நோக்கம் வடமாகாணத்தில் பாரியளவான அபிவிருத்தி வேலைதிட்டத்தை முன்னெடுப்பது என தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி பணிகள் தற்போது தேவைப்படுகிறது எனவும் வடமாகாண முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், வடமாகாணத்தைப் பொறுத்தவரை அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதை விட வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சனைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கை தரம் போன்றவற்றிற்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வடபகுதி மக்களின் இவ்வாறான வாழ்க்கைத்தர மேம்பாட்டு அபிவிருத்தியிலேயே நாம் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆயினும் அரசாங்கத்தை பொறுத்த வரையில் அவ்வாறான எண்ணம் இருப்பதாக தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்களது தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதே நமது அவா. அது எந்த தரப்பினரால் மக்களுக்கு கிடைத்தாலும் எமக்கு மகிழ்ச்சியே. ஆனால் அரசோ முன்னர் போன்றே இப்போதும் தாந்தோன்றித் தனமாக செயற்பட்டு வருகிறது. அதைவிடுத்து நம்மையும் இணைத்து ஒரு தீர்வை பெற முன்வருமேயானால் அது வரவேற்கத்தக்க விடயமே.

மேலும் வட மாகாணத்தில் இதுவரை காலமும் நிகழ்ந்த பிரச்சனைகள் தொடர்பாக திரட்டிய தரவுகளை அரசாங்க திணைக்களங்கள் சமர்ப்பிக்க மறுக்கின்றனர். அது ஒரு பாரிய பிரச்சனையே. அத் தரவுகள் எம்மிடம் வரும் நிலை உருவாகும். ஆகவே இனிவரும் காலம் சுவீட்சமான எதிர்காலமாக சுடர்விடும் எனவும் தெரிவித்தார்.

Related Posts