Ad Widget

வடக்கை இராணுவ பூமியாக மாற்ற முயற்சி – ஐங்கரநேசன்

பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து எங்கள் பூமியை (வட மாகாணத்தை) இராணுவ பூமியாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிக்கின்றனர் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

7

அச்சுவேலி, இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்திய பின்னர் கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘இராணுவத்திற்காக காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அச்சுவேலியில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்படவிருந்தது.

முதற்தடவையும் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது. ஆனால் இன்று (நேற்று திங்கட்கிழமை 21) அவர்கள் பொலிஸாரின் உதவியுடன் அப்பணிகளை முன்னெடுக்க முயன்றார்கள்.

காணி உரிமையாளர்களினதும், எங்களதும் கடுமையான எதிர்ப்பையடுத்து இன்றைய தினமும் அவர்களின் அந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் எங்களைக் கைது செய்திருந்தாலும், எங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டாலும் அல்லது எங்கள் மீது வேறு எந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் காணி உரிமையாளர்களுக்குத் துணை நிற்போம்.

அச்சுவேலியில் தற்பொழுது இராணுவம் இருக்கின்ற இந்தக் காணி கூட அரசாங்கத்தினுடைய காணியல்ல. இது அச்சுவேலி வெங்காயச் செய்கையாளர் சங்கத்திற்கு உரிய காணி. இந்தக் காணியில் இராணுவம் நிலைகொண்டுள்ளது என்று சொல்ல மாட்டேன் இராணுவம் ஆக்கிரமித்து உள்ளது என்றே சொல்வேன்.

இராணுவத்தினர் அந்த காணியும் போதாது என்று ஏனைய இடங்களையும் ஆக்கிரமித்து இந்த பூமியை ஒரு இராணுவ பூமியாக மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

காணி அளவீடு கைவிடப்பட்டது

அச்சுவேலியில் பதற்றம்

Related Posts