Ad Widget

வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உதயம்

வடக்கு மாகாணத்தில் பயன்தருமரங்கள் மற்றும் அழகுத் தாவரங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

1

வடக்கு மாகாணத்தின் மரநடுகை மாதமாகக் கார்த்திகை மாதம் வடமாகாணசபையில் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், அதற்குரிய மரங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.09.2014) விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் பயன்தரும் மரங்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போதே வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் மரக்கன்றுளை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும் அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கும் பண்ணையாளர்களுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது பெரும்குறைபாடாக இருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே, வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 9 பண்ணையாளர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு சங்கத்தின் யாப்பு விதிகளைத் தயாரித்ததன் பின்னர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவார்கள் என இக்கலந்துரையாடலில் முடிவாகியுள்ளது.

5

மேலும், இக்கலந்துரையாடலின்போது வடக்குக்குத் தேவையான மரக்கன்றுகளை வடக்கின் பண்ணையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்களில் நிரந்தரமான ஒரு இடத்தில் சகல பண்ணையாளர்களும் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்யவும் காட்சிப்படுத்தவும் விற்பனைக் கண்காட்சியினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6

இக் கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும், ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையான பண்ணையாளர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

Related Posts