வடக்கு முதல்வருக்கு எதிராக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ???

இராணுவத்தை பிரிக்க நினைக்கும் வடக்கு முதல்வருக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவிலான ஒன்றிணைந்த எதிரணி கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கு மக்களின் வாக்குகள் தேவை என்பதற்காக, ஆட்சியாளர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள் என்று, ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர பல்வேறு கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்றுக்கூடின. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன நாட்டில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றே இந்த ஆட்சியை கொண்டுவந்தார்கள்.

தற்போது இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், ஜனாதிபதி இப்போதே அரசாங்கம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிக பெரும்பான்மை இருந்தது. ஏனெனில், எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்பட்டது.

இப்படியான பலம்வாய்ந்த இந்த அரசாங்கத்தை நாம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தோல்வியடையச் செய்துள்ளோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியாது போயுள்ளது. அதேபோல், பிரதி சபாநாயகர் தெரிவிலும் அரசாங்கத்துக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன.

இதிலிருந்து, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிராகரித்து விட்டார்கள் எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இலங்கை இராணுவத்தை 9 மாகாணங்களுக்குமாக பிரிக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இராணுவத்தை பிரிக்க வேண்டும் என கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது என எவரேனும் ஒருவரால் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா? அதற்கான தைரியம் உள்ளதா?. இல்லை, இவர்கள் விசாரிக்க மாட்டார்கள். இவர்களுக்கு வடக்கு மக்களின் வாக்குகள் தேவை என்பதால் அதனை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் தோல்வியடைவோம் என்று தெரிந்தும் மஹிந்த ராஜபக்ஷ அன்று தேர்தலை நடத்தினார். அந்த மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். இதேநிலைமை இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்தால், நிச்சயமாக தேர்தல் ஒன்று நாட்டில் நடபெற்றிருக்காது” எனத் தெரிவித்தார்.

Related Posts