Ad Widget

வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் 2014ஆம் ஆண்டு தவிசாளர் பதவியில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சபையின் 2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவை நிறைவேற்றபடாமல் தோல்வி அடைந்தமையினால் உள்ளூராட்சி சட்ட ஏற்பாட்டிற்கு அமைய உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் தவிசாளரை பதவி நீக்கம் செய்திருந்தார்.

முதலமைச்சர் தன்னை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது தவறு என்று தெரிவித்து, அன்னலிங்கம் உதயகுமார் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிராளியாக குறிப்பிடப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அன்னலிங்கம் உதயகுமாரை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Related Posts