Ad Widget

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு சுமந்திரன் வேண்டுகோள்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார்.

ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாண சபையை நிர்வகின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருந்தது.

கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்கு சார்பாகச் செயற்பாடமையே எமக்கும் அவருக்கும் இடைவெளி உருவாக் காரணம்.

தேர்தலுக்காக நிதிதேவை கனடா சென்று அதனை பெற்று வாருங்கள் என்று அவரிடம் கேட்டிருந்தோம்.

ஏனெனில் வடமாகாண சபைத் தேர்தலின் போது நானும் சம்பந்தனும் கனடா சென்று நிதிஉதவிகளைப் பெற்று வந்தோம். இந்தத் தடவை நாங்கள் போகமுடியாது நீங்கள் அதனைச் செய்யுங்கள் என்று அவரிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவர், நீண்டதூரம் பயணம் செய்யமுடியாது முழங்கால் வலி என்று தெரிவித்தார். அதேகாலகட்டத்தில் அவர் அமெரிக்கா சென்றார் அப்போதும் அமெரிக்கா செல்கிறீர்கள் ஐயா ஒருமணி நேரம் கனடாவுக்கும் சென்று வாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு நேரமில்லை என்று சொல்லி தட்டிக்கழித்தார்.

பின்புதான் தெரிந்தது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மனமில்லாமல் கட்சிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். நடுநிலையாக இருக்கப்போகிறேன், ஊமையாக இருக்கப் போகிறேன் என்றார். எப்படியானவர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்று அடையாளம் காட்டுகின்றபோது தெளிவாகவே மாற்றுக்கட்சியை சுட்டிக்காட்டி அறிக்கை விட்டிருந்தார்.

எந்த ஒரு கட்சியும் தனது உறுப்பினர் இவ்வாறு செய்வதை அனுமதிக்காது. முதலமைச்சராக இருக்கலாம். இளைப்பாறிய நீதிபதியாக இருக்கலாம். இந்த விடயத்தில் அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறு தனிப்பட்ட முறையில் நான் கேட்டிருக்கின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எங்கள் மத்திய குழு உறுப்பினர் இருவர் மக்களை நடுநிலை வகிக்கச் சொன்னார்கள். கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், இளைஞர் அணிச் செயலாளரும் அப்படிச் செய்தமைக்காக அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தோம்.

எமது கட்சி போட்டியிடாத அந்தத் தேர்தலில் வோறொருவருக்கு வாக்களிக்குமாறு கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அவர்கள் நடுநிலை வகிக்கச் சொன்னதற்காக அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அப்படியிருக்கும்போது எமது கட்சி போட்டியிட்ட பிரதானமான இந்தத் தேர்தலின் போது இவர் இந்த மாதிரியாகச் செயற்பட்டமை கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் கூட ஒரு நீதியில்லாத செயற்பாடு என்பது எனது நிலைப்பாடு

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு பாரபட்சமாக இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கட்சி தன்னுடைய உறுப்பினர்களுக்குச் செய்கின்ற மரியாதைக் குறைவு என்பது எனது கருத்து. இதை நான் கட்சிக்கும் சொல்லியிருக்கிறேன்.

அதாவது கட்சி அவரிடம் விளக்கம் கேட்டவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் கட்சி இன்னும் அதைச் செய்யவில்லை.

கட்சியின் இரண்டு செயலாளர்களை நாங்கள் போட்டியிடாத தேர்தலில் நடந்துகொண்ட முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு, நாங்கள் போட்டியிட்ட முக்கியமான தேர்தலில் அதைவிட மோசமான முறையில் நடந்துகொண்ட ஒருவருக்கு எதிராக கட்சி நடிவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறானது என்ற வாதத்தை எவரும் மறுக்கமுடியாது.

நான் அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறேன். அதை இன்னும் கட்சி செய்யவில்லை. விரைவில் கட்சி அதைச் செய்தே ஆகவேண்டும். – என்றார்.

Related Posts