Ad Widget

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இந்த உதவியானது மீன்பிடி, விவசாய, கால்நடை மற்றும் மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு நின்று நிலைக்கக் கூடிய வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவதற்கான வழிவகைகளை உருவாக்குவதனூடாக அவர்களின் பொருளாதார வாய்ப்புக்களை மீளமைக்க உதவுவதையும் நோக்காகக் கொண்டுள்ளது

இதற்காக சமூக மட்டத்தில் திறன் பயிற்சிகள், பயனுள்ள ஆலோசனைகள், கருவிகள், உபகரணங்கள், விதைகள், அத்தியாவசியமான கட்டுமானங்கள் மற்றும் உள்ளுர் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கவுள்ளது.

இவ்வுவதவியானது புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் 550 குடும்பங்களை நேரடியான பயனாளிகளாக்கத் திட்டமிட்டுள்ளது.

Related Posts