Ad Widget

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பாகக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, திட்ட முகாமையாளர் நா.புகேந்திரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட முகாமைத்துவ நிபுணர் நிஷhந்தி மஞ்சுளா சமரசிங்க, திட்ட வளவாளர் கௌரி பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு முன்னெடுக்கப்படவுள்ள மீன்பிடித்துறை அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள நிலைபேறான மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இத்திட்டத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி, நங்கூரம் இடும் இடங்களும் கரைசேரும் இடங்களும் அமைத்தல், நண்டு, இறால், கடல்அட்டை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் கடல் நீரியல்வள அபிவிருத்தி, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தல், பெண்களுக்கு நுண்கடன்களை வழங்குதல் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், கரையோர வளங்களைப் பாதுகாத்தல் போன்றவை உள்ளடக்கப்படவுள்ளன.

இத்திட்டம் தொடர்பாகக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் அபிப்பிராயங்கள் மற்றும் தேவைகள் இக்கலந்துரையாடிலின்போது கேட்டறியப்பட்டுள்ளன. மேலும், நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனங்களும், தமது கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களை அழைத்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கூட்டுறவு அமைச்சிடம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கூட்டுறவு அமைச்சு இத்திட்டத்தை முன்னெடுக்கும் மீள்குடியேற்ற அமைச்சிடம் இவற்றைத் தொகுத்துக் கையளிப்பது எனவும் கலந்துரையாடலின் இறுதியில் முடிவாகியுள்ளது.

வடக்கின் கரையோரப் பகுதிகள் மற்றும் கடல்நீரேரிகளை அண்டிய 249 கிராமசேவையாளர் பகுதிகளில் இருந்தும் அடையாளம் காணப்படும் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான தேவைகளில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு 2017 தை மாதம் திட்டவரைவு இறுதி செய்யப்பட்டு அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01

03

04

05

06

07

Related Posts