வவுனியாவில், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புக்கள் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றினை மேற்கொண்டனர்.
வவுனியா விவசாயப் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் என்பவர் பதவியேற்று இரண்டரை வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வவுனியாவில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனை முன்பாக ஆரம்பித்து யாழ். வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியின் இறுதியில் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரை கண்டிக்கும் வீதி நாடகமும் அரகேற்றப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கம் என்பன குறித்த பேரணியில் கலந்துகொண்டனர்.