Ad Widget

வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 114வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கடந்த 111வது அமர்வின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சுக்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாணத்திற்கு, எதிர்வரும் நிதியாண்டுக்காக 26 ஆயிரத்து 754 மில்லியன் ரூபாய் நிதி முன்மொழியப்பட்டது.

அதன் பின்னர் உள்ளூராட்சி, கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, போக்குவரத்து, கூட்டுறவு மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டை நேற்று மாலை முன்மொழிய, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார். அதனையடுத்து, வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை சபை ஏகமனதாக அங்கீகரிப்பதாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வை ஜனவரி மாதம் 9ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, அன்று வரை சபை அமர்வுகளை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

Related Posts