Ad Widget

வடக்கு மாகாண சபையின் நிபுணர்குழுவால் கழிவு எண்ணெய் விவகாரம் தொடர்பில் விரிவான விஞ்ஞான ஆய்வு முன்னெடுப்பு

சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்குமாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்கழகம்,கொழும்புபல்கலைக்கழகம், மற்றும் பேராதனைபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசுக்கான சரியான மூலத்தை அடையாளம் காண்பது, நீரில் கலந்துள்ள மாசுக்களின் வகைகளையும் அளவுகளையும் கண்டறிவது, எண்ணெய் மேலும் பரவுவதைத் தடைசெய்வது, நீரைத் தூய்மைப்படுத்துவதற்கான பொருத்தமான வழிமுறைகளைப் பரிந்துரை செய்வது போன்றவற்றை ஆய்வின் இலக்குகளாகச் கொண்ட நிபுணர்குழு, ஆய்வின் முதற்கட்டமாகத் திட்டவரைவுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அது முற்றுப்பெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை (09.02.2015) பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர்மாதிரிகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆய்வில் துல்லியமான அளவீடுகளைப் பெறுவதற்கும் ஆய்வின் முடிவுகளைச் சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அமைவாக நிபுணர்குழு, கொழும்பில் அமைந்துள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் உதவிகளை நாடியிருந்தது. இதையடுத்து ஆய்வு உபகரணங்கள் சகிதம் வருகைதந்திருந்த கைத்தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர்களின் உதவியோடு இம்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந் நீர் மாதிரியைச் சேகரிப்பதில் நிபுணர் குழுவோடு தரவுகளைப் பதிவு செய்யும் உதவியாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர். இந்நீர்மாதிரிகள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்குழு, யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திலும், தொண்டமானற்றில் அமைந்துள்ள வடமாகாண நீரியல் ஆய்வுமையத்திலும்இது தொடர்பானஆய்வுகளை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

5

6

7

9

10

11

12

Related Posts